இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 20, 2017

தண்ணீர்...தண்ணீர்...

இந்த பதிவு  இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனைக்கு தீர்வை தரப்போகிறது என்றால் அது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சந்தோஷம் தான்.அப்படி என்ன பிரச்சனை என்றால் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீர் பிரச்சனைதான்.பருவமழை பொய்த்து போன இந்நாளில் ஆங்காங்கே தண்ணீர் கடைகள் முளைத்துவிட்டன.ஒரு குடம் தண்ணீர் வீட்டிற்கு வரவேண்டுமென்றால் பதினைந்து ரூபாய் செலவழிக்க வேண்டும்.இதை சமைக்கவும்,மற்ற சமையலறை உபயோகத்துக்கும் மட்டுமே சிக்கனமாக பயன்படுத்த இயலும்.குடிப்பதற்கு தனியாக கேன் வாங்க முப்பத்தைந்து ருபாய் எடுத்துவைக்கவேண்டும்.இந்த நிலையில் ஆழ் குழாய் மூலம் எடுக்கும் நீர் உவர் நீராக இருந்தால் அதோ கதிதான்.குளிக்க தகுந்த நீராக அது இருக்காது.அப்போது ஒரு வீட்டில் நான்கு நபருக்கும் அறுபது ரூபாய் கூடுதலாக செலவாகும்.இது ஒரு நாள் செலவு.இனி வரக்கூடிய பெரும் தண்ணீர் பஞ்சத்தை எப்படி சமாளிப்பது.குடிக்க..சமைக்க காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாலும் குளிக்க..துவைக்க என்ன செய்வது..? தொடர்ந்து படியுங்கள்.

முதலில் கடையில் எளிதாக கிடைக்கும் திருகு குழாய் அமைப்புள்ள வாட்டர் கேனை வாங்கிக்கொள்ளுங்கள்.அதை ஒரு உயரமான மேடையிலோ அல்லது ஸ்டூலிலோ வைத்து அதனுள்ளே சிறிய அளவிலான அடுப்புக்கரியை  இரண்டு அல்லது மூன்று இன்ச் அளவு உயரத்துக்கு பரவலாக நிரப்புங்கள்.அதன் மேலே மணலை  இரண்டு இன்ச் அளவுக்கு நிரப்புங்கள்.அதற்கும் மேலே சிறிய அளவிலான கருங்கற்களை நிரப்புங்கள்.பெரிய கேனாக இருந்தால் இதே வரிசைமுறையில் மீண்டும் ஒரு அடுக்கு இந்த பொருட்களை போடலாம்.


 இப்போது உங்கள் பில்டர் தயார்.இந்த கேனை அசைக்காமல் மெதுவாக உங்கள் வீட்டு உவர் நீரை ஊற்றுங்கள்.நீங்கள் ஊற்றிய நீரானது கருங்கல் ஜல்லி,மணல்,அடுப்புக்கரி போன்றவற்றின் மூலம் வடிகட்டப்பட்டு ஓரளவு நல்ல நீராக நமக்கு கிடைக்கும்.இதை கொஞ்சம் கொஞ்சமாக வேறு ஒரு கலனில் நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டால் குளிப்பதற்கும் காசுகொடுக்காமல் தண்ணீர் தயார்.தேவைப்பட்டால் திருகு குழாய் முனையில் சிறிய துணி அல்லது வலை அமைப்புடைய தண்ணீர் வடிகட்டியை கட்டி சிறு துகள்கள் வராமல் வடிகட்டிக்கொள்ளலாம்.முயற்சி பண்ணுங்கள்
இது தவிர லாரிகளில் விநியோகப்படுத்தப்படும்  நீர்  கலங்கலான நீராக இருக்கும் பட்சத்தில் வெறும் படிகாரம் ஒன்றை மட்டுமே கொண்டு நீரிலுள்ள துகள்களை படிய வைக்க முடியும்.தண்ணீரில் படிகாரத்தை இரண்டு மூன்று  சுற்று சுற்றி எடுத்துவிட்டாலே தண்ணீர் தெளிந்துவிடும்.இதை குடிநீராகவும் பயன்படுத்தலாம்.


No comments:

Post a Comment