இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Mar 29, 2017

Ellu Thuvaiyal Recipe .... தமிழில்

சாதத்தில் பிசைந்து சாப்பிட குழம்பு,ரசம்,கூட்டு,என்று எது இருந்தாலும் எள்ளுத்துவையல் என்ற ஒன்றை பக்கத்தில் வைத்துவிட்டால் மற்ற எல்லாவற்றையும் தூரத்தில் தள்ளி வைத்துவிடுவோம்.அந்த அளவுக்கு இது தனித்துவமான சுவையை கொண்டதாக உள்ளது.இன்று நாமும் அதை செய்து சுவைப்போமா...?

தேவையான பொருட்கள் ;

எள்ளு - 100 கிராம் 
தேங்காய் துருவல் - 1 கைப்பிடி 
காய்ந்த மிளகாய் -4
புளி - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 



செய்முறை;
  • முதலில் ஒரு வாணலியில் எல்லை போட்டு நன்கு வெடிக்கும்வரை வறுக்கவும்.
  • பின்னர் காய்ந்த மிளகாயையும் நன்கு வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • இப்போது மிக்ஸியில் அனைத்து பொருள்களையும் போட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது எள்ளு துவையல் தயார்.இது சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

CFC - CORN FLAKE CHICKEN RECIPE ..... தமிழில்

சிக்கன் ரெஸிபி என்றால் இடைவிடாது எழுதிக்கொண்டே போகலாம்.குழம்பு என்றால் அதிலும் பல வகை உண்டு.வறுவல் என்றால் அதிலும் பலவகை உண்டு.இன்று நாம் செய்யபோவதும் அப்படி ஒரு சிறப்பு வகை தான்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
 இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
முட்டை - 2 
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு.
கார்ன் பிளேக்ஸ் - 1 கப் 
எண்ணெய் - தேவையான அளவு 



செய்முறை ;
  • உப்பு,மிளகாய்ப்பொடி,இஞ்சிபூண்டு விழுது மூன்றையும் நன்றாக கலந்து சிக்கனில் போட்டு நன்கு கிளறி ஊறவிடவும்.
  • முட்டையை அடித்து தனியாக வைக்கவும்.
  • கார்ன் பிளேக்ஸ் - ஐ கைகளால் நன்றாக உடைத்து பொடியாக்கவும்.மிக்ஸியிலும்  போடலாம்.ஆனால் மாவுபோல் ஆகக்கூடாது.
  • இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
  • ஊறவைத்துள்ள சிக்கனை முட்டையில் தோய்த்து பின்னர் பொடித்துவைத்துள்ள கார்ன் பிளேக்கில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொறித்துஎடுக்கவும்.     
இதை உங்கள் வீட்டு பிள்ளைகள் அப்படியே சாப்பிடுவார்கள்.




Sarkkarai Pongal Recipe .... தமிழில்

சர்க்கரை பொங்கல் என்றாலே இனிக்கிறது இல்லையா...? அந்த சுவை கொஞ்சம்கூட குறையாமல் செய்துபார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

பச்சரிசி - 2 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
வெல்லம் - கால் கிலோ
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 100 மி.லி
ஏலக்காய் - 4
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
தண்ணீர் - 7 கப்
பால் - 1 கப்
முந்திரி&திராட்சை - 25 கிராம்



செய்முறை;

  • முதலில் ஒரு குக்கரில் பாசிப்பருப்பை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.
  • அதோடு கழுவி வைத்துள்ள அரிசி,உப்பு,ஏலக்காய் பொடி ,தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.3 விசில் வரும்வரை காத்திருக்கவும்.
  • இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லம் மற்றும் அரை கப் தண்ணீர்விட்டு வெல்லம் கரையும்வரை கொதிக்கவிடவும். அதை வடிகட்டி தனியே எடுத்துவைக்கவும்.
  • இப்போது குக்கரை திறந்து வெல்லக்கரைசலை சேர்க்கவும்.அரிசியோடு வெல்லம் கலந்து வரும்போது பால் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி , திராட்சையை சேர்க்கவும்.
  • இறுதியாக பச்சைக்கற்பூரம் மற்றும் மீதமுள்ள நெய்யை சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சொல்லுங்கள்.சர்க்கரை பொங்கல் என்றாலே இனிக்கிறது இல்லையா...?



Mar 28, 2017

இந்த லீவுல இதெல்லாம் பண்ணலாமா குட்டீஸ் ...?


பெரும்பாலான பிள்ளைகளுக்கு தேர்வு ஆரம்பமாகிவிட்டது.சிலருக்கு விடுமுறையும் ஆரம்பமாகிவிட்டது.தொடர்ந்து அறுபது நாட்களுக்குமேல் விடுமுறை.பிள்ளைகள் என்ன செய்யலாம் இந்த விடுமுறைக்கு..? வாங்க பேசலாம்.


  • இந்த விடுமுறையில் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளலாம்.அது என்ன என்பது அவரவர் ஆர்வத்தை பொறுத்தது.பணம் கொடுத்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது இல்லை.நாம்மை சுற்றியுள்ள யாரோ ஒருவரிடம் நமக்கு பிடித்த திறமை இருக்கும்.எனவே முயற்சி பண்ணுங்க குட்டீஸ்.
  • இதுவரை பள்ளியில் மருதாணி,நெயில் பாலீஷ் எல்லாவற்றிற்கும் தடா.ஒரு இரண்டு மாதம் உங்களுக்கு பிடித்த மருதாணியை போட்டுக்கோங்க.உங்கள் ட்ரெஸ்க்கு பொருத்தமா நகபூச்சும் போட்டு கலக்குங்க.
  • அம்மாவுக்கோ..பக்கத்துவீட்டு ஆண்ட்டிக்கோ  கிராப்ட் தெரிஞ்சா அதை கத்துக்கிட்டு நீங்களும் செஞ்சு வீட்டை அழகுபடுத்துங்க.
  • உங்க துணிமணிகளை அழகா மடித்து அடுக்கிவையுங்க .உள்ளாடைகளுக்கு தனியா ஒரு பாக்ஸ் போட்டு மூடிவையுங்க.அடிக்கடி தேடவேண்டிய வேலையே இருக்காது.அம்மாவையும் தொல்லை பண்ணவேண்டாம்.
  • உங்க ட்ரெஸ்ஸிங் டேபிளை அழகா அடுக்குங்க.தேவையில்லாததை தூக்கி போட்டுட்டு தேவையானதை மட்டும் பத்திரப்படுத்துங்க.
  • வெளியூரில் இருக்கும் உங்க கஸினுக்கு போன் பண்ணி பேசுங்க.
  • உங்களுக்கு பத்தாம போன உங்க பழைய துணிகளை எடுத்து தனியா வையுங்க.அது யாராவது ஒருவருக்கு உதவும்.அவங்கள தேடிப்பிடிச்சு கொடுங்க.ஒருத்தருக்கு உதவின திருப்தி நிச்சயமா உங்களுக்கு வரும்.
  • தினமும் ஆங்கிலத்தில் சில பயிற்சிகளை எடுத்துக்கொள்ள மறக்காதீங்க.உங்க ஆங்கில அறிவு உங்க படிப்புக்கு முக்கியம்.

  • வீட்டில் சின்ன சின்ன உதவிகளை பண்ணுங்க.அப்போதுதான் நீங்களும் கத்துக்கமுடியும்.
  • தலையில் பேன் தொல்லை உள்ளவங்க இந்த விடுமுறையில் அதை ஒழிச்சுக்கட்ட எண்ணப்பண்ணனுமோ அதை பண்ணுங்க.நாட்டுமருந்துக்கடையில் தரமான பேன்மருந்து கிடைக்கும்.
  • தினமும் தக்காளி,தயிர்னு முகத்துக்கு பூசிட்டு வாங்க.நீங்க திரும்ப ஸ்கூல் போறப்ப பளிச்ன்னு இருப்பீங்க.
  • வீட்டில கம்ப்யூட்டர் இருந்தா அடிப்படை விஷயங்களை கத்துக்கோங்க .
  • பொதுஅறிவு புத்தகங்களை படித்து அதை மற்றவர்களுடைய விவாதித்து விளையாடுங்கள்.
இது தவிர .இன்னும்.இன்னும்..இன்னும் என்னவெல்லாம் செய்யணும்னு அம்மா சொல்வாங்க.அதன்படி  செய்யுங்க.யாருக்கும் தொல்லை பண்ணாம.

Tasty Inippu Paniyaaram Recipe ... தமிழில்

பணியாரம் செய்வது ஒன்றும் கடினமான வேலை கிடையாது.எளிமையாக நம் வீட்டில் எப்போதும் இருப்பில் இருக்கும் இட்லிமாவைக்கொண்டே சுவையான பணியாரம் செய்து சுவைக்கலாம்.சுவையில் எந்த மாறுபாடும் இருக்காது. செய்து பார்க்கலாமா...?



தேவையான பொருட்கள் ;

இட்லிமாவு - 2 கப்
வெல்லம் - கால்கிலோ
ஏலக்காய் - 4
தேங்காய் துருவல் - அரை மூடி அளவு
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு

செய்முறை ;

  • வெல்லத்தை கால் கப் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.வெல்லம் நன்கு கரைந்தபின் அதை கெட்டியான இட்லிமாவுடன் சேர்க்கவும்.மேலும் ஏலக்காய் பொடி ,தேங்காய் துருவல்,சமையல் சோடா  போன்றவற்றையும் கலந்து மாவை நன்கு கலக்கவும்.
  • இப்போது பணியார சட்டியில் நெய் ஊற்றி மாவை கொஞ்சம் கொஞ்சமாக அரை குழி மட்டும் ஊற்றி மூடிவைக்கவும்.மேலே இலேசாக நெய் ஊற்றலாம்.பின்னர் ஒரு கூர்மையான குச்சியால் பணியாரத்தை திருப்பி போட்டு இளம் சிவப்புநிறம் வரும்வரை வேகவிடவும்.
இப்போது சுவையான பணியாரம் தயார்.சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.


Tasty vellai kuruma recipe ... தமிழில்

இட்லி ,தோசை ,சப்பாத்தி போன்றவை செய்யும்போது அதற்கு தொட்டுக்கொள்ள என்னசெய்வது என்றுதான் எல்லோருக்கும் குழப்பம் அதிகமாக இருக்கும்.அதுவும் வெயில் காலத்திற்கு ஏற்றாற்போல மசாலா அதிகமில்லாமல்,காரம் குறைவாக மிகவும் எளிதாக எல்லோரும் விரும்பும்வண்ணம் செய்யவேண்டும் என்றால்.....இருங்க..இருங்க.. ஏன் கவலைப்படுறீங்க.வாங்க நம்ம கிச்சனுக்கு ..வெள்ளைகுருமா செய்து பழகலாம்.



தேவையான பொருட்கள் ;

உருளைக்கிழங்கு - 3
பச்சைபட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 1                      
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
சோம்பு - சிறிதளவு
கசகசா - 1 தேக்கரண்டி
கரம்மசாலாபொடி - அரை தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை ;


  • உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
  • பட்டாணியை உப்புசேர்த்து வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • தேங்காயுடன் சோம்பு, கசகசா,பச்சைமிளகாய்  சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் வெங்காயம்,கறிவேப்பிலை  சேர்க்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வதக்கவும்.
  • பின்னர் தக்காளியை சேர்த்து இலேசாக கிளறவும்.நன்கு மசியும்வரை வதக்க வேண்டாம்.
  • பின்னர் உருளைக்கிழங்கு,கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.கிழங்கை இலேசாக மசித்து விடலாம்'
  • இப்போது வேகவைத்துள்ள பச்சைபட்டாணி,அரைத்துவைத்துள்ள தேங்காய் ,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இப்போது மிகவும் ஈஸியான வெள்ளை குருமா தயார்.வாங்க .. உங்களுக்கு பிடிச்ச இட்லியோ,தோசையோ,சப்பாத்தியோ சாப்பிடலாம்.

Marina Paruthipal Payasam ... தமிழில்

பருத்திப்பால் பாயசம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய கோடைகாலத்துக்கு ஏற்ற ஒரு பானம் .சென்னை,மதுரை போன்ற பெருநகரங்களில் கூட பருத்திப்பால் பாயசம் மிக பிரபலம்.மெரினாவில் காலை நடைப்பயிற்சிக்கு பின்னர் பருத்திப்பால் பாயசம் சாப்பிடாமல் வருபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு.இன்று நாம் சுவைக்கப்போவதும் மெரினாவின் பருத்திப்பால் பாயாசம்தான்.வாங்க போகலாம்.



தேவையான பொருட்கள்;

பருத்திக்கொட்டை - 100 கிராம்
வெல்லம் - 100 கிராம்
சேமியா - 2 கைப்பிடி
சுக்குப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை                            
முந்திரி திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் - 2
பால் - 1 கப்
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை ;
பருத்திக்கொட்டையை முதல்நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதை மிக்ஸியில்இரண்டு குவளை நீர்விட்டு  நன்கு அரைத்து பின் வடிகட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும்.பின்னர் அடி கனமான பாத்திரத்தில் அரைத்துவைத்துள்ள பருத்திப்பாலை ஊற்றி நன்கு காய்ச்சவேண்டும்.நன்கு கொதித்ததும் சேமியா மற்றும் பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்க்கவும்.சேமியா வெந்ததும் உப்பு,வெல்லம் ,சுக்குப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் பாலையும் அதோடு கலந்து தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.இறுதியாக முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து கொட்டி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.இப்போது சுவையான மெரினா பருத்திப்பால் பாயசம் தயார்.

Mar 27, 2017

Lemon Mint Juice Recipe ... தமிழில்

வெயில் காலங்களில் குளிர்ச்சியாக எதையாவது குடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.கடைகளில் விற்கும் குளிர்பானங்கள் விலையோ அதிகம் மற்றும் உடலுக்கும் தீங்கு தரக்கூடியவை.வீட்டில் எதையாவது செய்யலாமென்றால்  அடிக்கிற வெயிலில் இன்னொரு வேலையா என்ற சலிப்பு ஒருபுறம்.என்னதான் செய்வது..? வாங்க..ஒரு லெமன் மின்ட் ஜூஸ் குடிச்சிட்டே பேசலாம்.


தேவையான பொருட்கள்;
எலுமிச்சை - 2
புதினா இலை - ஒரு பிடி
சர்க்கரை - 6 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 3 கப்

செய்முறை ;


  • எலுமிச்சையை 3 கப் தண்ணீரில் நன்கு பிழிந்து விடுங்கள்.
  • புதினாவை மிக்ஸியில் நன்கு அடித்து எலுமிச்சை நீரோடு சேருங்கள்.
  • இதை நன்கு வடிகட்டி எடுத்துக்கொண்டு அதோடு சர்க்கரை மற்றும் உப்பு சேருங்கள்.
இப்போது உங்கள் லெமன் மின்ட் ஜூஸ் தயார்.இது செலவும் குறைவு.செய்வதும் சுலபம்.உடலுக்கும் ஆரோக்கியம்.எப்படி இருக்கிறது..? நீங்கள் குடித்த லெமன் மின்ட் ஜூஸ்.

Mar 24, 2017

MADRAS MASALA TEA RECIPE .....தமிழில்

மசாலா டீ என்றாலே எல்லா சீதோஷண நிலையிலும் ஒரு குதூகலம் வந்துவிடும்.அந்த அளவுக்கு சுவையில் அனைவரையும் கட்டிப்போடும் சக்தி மசாலா டீ -க்கு உண்டு.இன்று அதன் செய்முறைகளை பார்ப்போமா...?



தேவையான பொருட்கள்;
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சுக்கு - சிறிய துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
பால்  - 250 மி.லி
சர்க்கரை - தேவையான அளவு
டீ தூள் - 2 தேக்கரண்டி

செய்முறை;
முதலில் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சுக்கு,சோம்பு அனைத்தையும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.பின்னர் பாலை அடுப்பில் வைத்து சர்க்கரை ,டீ தூள் மற்றும் பொடித்துவைத்துள்ள மசாலா அனைத்தையும் போட்டு கொதித்தவுடன் இறக்கி வடிகட்டி பரிமாறவும்.இதன் சுவையை அறிந்தவர்கள் மீண்டும் சாதாரண டீயை விரும்பமாட்டார்கள் என்பது நிச்சயம்.விரும்பினால் நான்கு மிளகையும் சேர்த்துக்கொள்ளலாம். 

Mar 22, 2017

Top Ten Things For Healthy hair ....தமிழில்


  1. வெந்தயம் 
  2. வெங்காயம்  
  3. முட்டை 
  4. உருளைக்கிழங்கு சாறு 
  5.  மருதாணி 
  6. விளக்கெண்ணெய் 
  7. முடக்கத்தான் கீரை சாறு 
  8. ஆப்பிள் சீடர் வினிகர் 
  9. பூண்டு சாறு 
  10. கிரீன் டீ 


இவை அனைத்தும் என்ன என்று பலரும் யோசிப்பீர்கள்.இவை எல்லாமே நம் தலைமுடிக்கு ஊட்டம் தரக்கூடிய பொருட்கள்தான்.இவற்றை மாற்றி மாற்றி நம் தலைமுடியின் வேர்களில் படுமாறு வாரம் ஒருமுறை ஊறவைத்து குளிக்க தலைமுடி உதிர்தல் பிரச்சனை நீங்கி கூந்தல் அடர்த்தியாக வளரத்தொடங்கும்.கூந்தல் உதிர்வுக்கு முறையான பராமரிப்பின்மையும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.எனவே வாரத்தில் ஒருமுறை இவற்றில் ஏதேனும் ஒன்றை தலைக்கு  தேய்த்து குளிப்பதை வழக்கப்படுத்திக்கொள்வதுடன் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டுவந்தால் கூந்தல் உதிர்வை கட்டிப்படுத்திட நிச்சயமாக முடியும் என்பதில் சந்தேகமில்லை.

HOW TO ADD A CLOCK TO YOUR BLOG....தமிழில்

இன்று பிளாகரில் [blogger ] எழுதுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.அவர்கள் தங்கள் பிளாகரை அழகுபடுத்த புதுப்புது வழிகளை தேடிக்கொண்டே இருப்பர்.புதிதாக வருபவர்களும் தமது தேடுதலை தொடர்ந்துகொண்டே இருப்பர்.அவர்கள் தங்கள் பிளாகரில் கடிகாரம் மற்றும் நாட்காட்டியை வைப்பது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
முதலில் உங்கள் பிளாக்கரில் LAYOUT பகுதிக்கு சென்று SIDE BAR - ல் ADD A GADGET -ஐ  கிளிக் பண்ணுங்கள்.இப்போது தோன்றும் விண்டோவில் HTML /JAVASCRIPT -ஐ செலக்ட் பண்ணுங்கள்.அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள CODE - ஐ பேஸ்ட் பண்ணிவிட்டு SAVE பண்ணுங்கள்.இப்போது உங்கள் பிளாக்கருக்கு கடிகாரம் தயார்.

<iframe style="overflow:hidden;border:0;margin:0;padding:0;width:165px;height:130px;" src="http://www.clocktag.com/html5/dt232.html"></iframe>



டிஜிட்டல் கடிகாரம் வேண்டுவோர் கீழே உள்ள CODE -ல் எதாவது ஒன்றை பேஸ்ட் பண்ணவும்.


<embed src="http://www.clocktag.com/cs/d42.swf"  width="160" height="50"  wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed>

அல்லது

<embed src="http://www.clocktag.com/cs/d51.swf"  width="135" height="54" wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed>

அல்லது

<embed src="http://www.clocktag.com/cs/d144.swf"   width="135" height="32"   wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed>

அல்லது

<embed src="http://www.clocktag.com/cs/d152.swf"  width="150" height="47"  wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed>

Mar 21, 2017

ANJARAI PETTI 52 ... தமிழில்

நம்மை சுற்றி நமக்கு கிடைக்கும் பொருட்களின் பயன்கள் பெரும்பாலும் நாம் அறியாத ஒன்றாகவே இருக்கிறது.அதன் பயன்களை நாம் அறிந்திருந்தால் மருத்துவத்தை தேடி நாம் செல்லவேண்டிய நிலை ஏற்படாது. அவ்வாறு உணவே மருந்து என்ற வகையில் பயன்படும் சில பொருட்களைப்பற்றி அறிந்துகொள்ளும் முயற்சியே இந்தப்பதிவு.



  1. நெல்லிக்காய் - என்றும் இளமைக்கு,
  2. செம்பருத்தி பூ - இதயத்தை வலுவூட்ட 
  3. முடக்கத்தான் கீரை - மூட்டு வலிக்கு 
  4. கற்பூரவள்ளி - இருமல்,சளிக்கு 
  5. அரைக்கீரை - நீரிழிவு நோய்க்கு 
  6. மணத்தக்காளி கீரை - வாய்ப்புண் ,குடல் புண் 
  7. பொன்னாங்கண்ணி கீரை - கண் பார்வைக்கு 
  8. மாதுளம் பழம் - மாரடைப்புக்கு 
  9. அருகம்புல் சாறு - இரத்தத்தை சுத்திகரிக்க 
  10. சீத்தாப்பழம் - கேன்சர் நோயை குணமாக்க 
  11. பப்பாளி - கண் பார்வைக்கு 
  12. முள்ளங்கி - நீரிழிவு நோய்க்கு 
  13. வெந்தயக்கீரை - வாயு தொல்லைக்கு 
  14. துளசி - சளி , இரத்த அழுத்தத்திற்கு 
  15. சுண்டைக்காய் - மார்பு சளிக்கு 
  16. ஆடா தொடை - சளி,அதிக உதிரப்போக்குக்கு..
  17. வல்லாரை - ஞாபகசக்திக்கு 
  18. பசலை கீரை - இரத்த அழுத்தத்திற்கு 
  19. பீட்ரூட் - இரத்த சோகைக்கு 
  20. அன்னாசி பழம் - ஜீரண சக்திக்கு 
  21. கல்யாண முருங்கை - நரை முடிக்கு 
  22. கேரட் - கண் பார்வைக்கு 
  23. தூதுவளை - மார்பு சளிக்கு 
  24. புதினா - அஜீரணத்திற்கு 
  25. கீழாநெல்லி - மஞ்சள் காமாலைக்கு 
  26. வாழைத்தண்டு - சிறுநீரக கற்களுக்கு 
  27. கத்திரிக்காய் - இரத்த கொழுப்பை குறைக்க 
  28. பிரண்டை - எலும்புக்கு 
  29. கறிவேப்பிலை - இரும்புசத்து குறைபாட்டுக்கு 
  30. வாழைப்பழம் - மலச்சிக்கலுக்கு 
  31. திராட்சை விதை - கேன்சருக்கு 
  32. நித்ய கல்யாணி பூ - கேன்சருக்கு 
  33. நெல்லிக்காய் - நோய் எதிர்ப்புசக்திக்கு 
  34. மஞ்சள் - கிருமி நாசினி 
  35. தேன் - நோய் எதிர்ப்புசக்தி 
  36. பூண்டு - கொழுப்பை கரைக்க 
  37. சோம்பு - கொழுப்பை கரைக்க 
  38. சீரகம் - உள் உறுப்புகளை சீர் செய்ய 
  39. பெருங்காயம் - வாயுத்தொல்லைக்கு 
  40. வெந்தயம் -  எடை குறைக்க ,இரும்பு சத்து குறைபாட்டுக்கு 
  41. கற்றாழை - உடல் குளிர்ச்சிக்கு 
  42. பட்டை பொடி - அதிக உதிரப்போக்குக்கு 
  43. வாழைப்பூ - அதிக உதிரப்போக்குக்கு 
  44. சின்ன வெங்காயம் - நோய்  எதிர்ப்புசக்திக்கு 
  45. அத்திப்பழம் - இரும்புசத்து 
  46. அவுரிப்பொடி - முடி கருமைக்கு 
  47. பனை வெல்லம் - இரும்பு சத்து 
  48. சுக்கு - வாயு தொல்லைக்கு 
  49. முருங்கைப்பூ - ஆண்மை பெருக்குக்கு 
  50. முருங்கைக்கீரை - இரும்புசத்து 
  51. மல்லி விதை - பித்தத்திற்கு 
  52. உளுந்து - எலும்பு உறுதிக்கு 

VENDAIKKAI MOR KUZHAMBU RECIPE ...- தமிழில்

வெயில் காலங்களில் அதிக மசாலா சேர்த்த குழம்பு வகைகளை உண்ணுவது  எல்லோருக்கும் ஒவ்வாத ஒன்று.அதனால் வெயில் நேரங்களில் மசாலா அதிகம் சேர்க்காத உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும்போது சாப்பிட்ட உணர்வே இலகுவாக இருப்பதோடு  மனதுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.அந்த வரிசையில்  இன்று நம் சமயலறையில் நாம் அறிந்துகொள்ளப்போவது மிகவும் எளிமையான மோர் குழம்பின்  செய்முறையைத்தான்.போவோமா...?

தேவையான பொருட்கள்;

தயிர் - 1 கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சரிசி - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
வெண்டைக்காய் - 6
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை  - 2 கொத்து
கடுகு,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 2
பச்சைமிளகாய் - 3



செய்முறை ;
முதலில் கடலை பருப்பு,பச்சரிசி இரண்டையும் அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும்.பின்னர் அதோடு பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்கு மிருதுவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  • வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  • தயிரை நன்கு கடைந்து மோராக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு,காய்ந்தமிளகாய் சேர்த்து அது பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • பின்னர் வெண்டைக்காயை போட்டு வதக்கவும்.
  • வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் கடைந்து வைத்துள்ள மோர்,அரைத்துவைத்துள்ள கடலைப்பருப்பு கலவை ,மஞ்சள்தூள்,உப்பு,பெருங்காயத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.இப்போது எல்லோருக்கும் பிடித்த மோர்க்குழம்பு தயார்.இது சாதம் மட்டுமில்லாமல் சப்பாத்திக்கும் ஏற்ற துணை உணவு தான்.

Mar 17, 2017

Homemade Grape wine recipe ... தமிழில்

தேவையான பொருட்கள்;

திராட்சை - 1 கிலோ
சர்க்கரை   - 1கிலோ
கோதுமை - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 3 லிட்டர்



செய்முறை; 

  • திராட்சை , கோதுமை, பச்சரிசி மூன்றையும் தனித்தனியாக தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • தண்ணீரை நன்கு சூடுபடுத்தி ஆறவைத்துக்கொள்ளவும்.
  • ஈஸ்ட்டை அரை கப் நீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • சர்க்கரையை நீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை கரையும்வரை சூடுபடுத்தவும்.
  • ஒரு சுத்தமான பீங்கான் ஜாடியில் திராட்சையை போட்டு மத்தால் மெதுவாக மசித்துவிடவும்.
  • பின்னர் அரிசி,கோதுமை இரண்டையும் போட்டு இன்னும் நன்றாக மத்தால் அழுத்தி கடையவும்.
  • இப்போது சர்க்கரை கரைசல்,ஈஸ்ட் கரைசல் இரண்டையும் ஒவ்வொன்றாக சேர்த்து ஒரு நீளமான மரக்கரண்டியால் கலக்கிவிடவும்.
  • ஜாடியை நன்கு மூடி காற்று புகாத இடத்தில் 45 நாட்களுக்கு வைக்கவும்.
  • தினமும் ஒருமுறை நீளமான மரக்கரண்டியால் கிளறிவிட்டு மூடவும்.
  • 45 நாட்களுக்கு பிறகு ஜாடியை திறந்து இலேசாக கலக்கிவிட்டு மெல்லிய துணியால் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.இப்போது சுவையான திராட்சை ஒயின் தயார்.நாட்கள் செல்ல செல்ல இதன் சுவை அதிகரிக்கும்.எனவே அதிககாலம் பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம்.

veg omelette... தமிழில்

வெஜ் ஆம்லெட் என்பது முட்டை இல்லாமல் செய்யப்படும் ஒரு உணவு.இது பார்ப்பதற்கு முட்டை ஆம்லெட் போன்றே தோற்றத்தில் ஒத்திருக்கும்.சீக்கிரம் வாங்க.கிச்சனுக்கு போகலாம்.

தேவையான பொருட்கள்;
கடலை மாவு - ஒரு கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
கொத்துமல்லி - சிறிதளவு
மிளகுப்பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை



செய்முறை;
முதலில் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கொத்துமல்லி நான்கையும் பொடியாக  நறுக்கிக்கொள்ளவும்.பின்னர் கடலைமாவை கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொண்டு அதில் வெட்டிவைத்துள்ள கலவையை சேர்க்கவும்.மிளகுப்பொடி,மஞ்சள்பொடி,உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.பின்னர் ஒரு தோசைக்கல்லை சூடாக்கி இந்த கலவையை ஆம்லெட்களாக போட்டு எடுக்கவும்.சாப்பிட சுவையான வெஜ் ஆம்லெட் தயார்.

CHETTINADU SAIVA MEEN KUZHAMBU ... - தமிழில்

அசைவம் சாப்பிட முடியாத விரத நாட்களில் அசைவ பிரியர்களுக்கென்றே தயாரிக்கப்படும் இந்த சைவ மீன் குழம்பு செட்டிநாடு சமையலில் மிகவும் சிறப்பான ஒன்று. அதன் செய்முறைகளை பார்ப்போமா..?




தேவையான பொருட்கள்;

தட்டை பயறு - 250 கிராம்
பூண்டு - 5 பல்
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
தனியா பொடி - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு,வெந்தயம் -சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை;
தட்டை பயறை இரவே ஊறவைத்து காலையில் நீரை நன்கு வடித்துவிட்டு அதோடு பூண்டு,சோம்பு,அரை தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, சிறிது மஞ்சள் பொடி  அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு நீர் விடாமல் அரைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் இந்த கலவையை வாழை இலை மேல் தடிமனாக பரப்பி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்துக்கொள்ளவேண்டும். நன்கு வெந்ததும் அதை ஆறவிட்டு சிறு துண்டுகளாக வெட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இந்த துண்டுகளை அதன் வண்ணம் மாறும்வரை
 இருபுறமும் திருப்பி திருப்பி போட்டு எடுத்துவைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம் போட்டு ,பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.இப்போது கறிவேப்பிலை மற்றும் பச்சைமிளகாயையும் சேர்த்துவிடலாம்.வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு மசியும்வரை வதக்கி அதோடு மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தனியாதூள்,சாம்பார்தூள்,உப்பு சேர்த்து கிளறி புளிக்கரைசலையும் சேர்த்து கொதிக்கவிடவும்.அது நன்கு கொதித்த பின்பு வெட்டிவைத்துள்ள தட்டைப்பயறு துண்டுகளை சேர்த்து வேகவிடவும்.பத்துநிமிடம் கழித்து அடுப்பை அனைத்துவிடலாம்.இப்போது சுவையான செட்டிநாடு சைவ மீன்குழம்பு சுவைப்பதற்கு தயார்.

Mar 11, 2017

ULUNTHU KALI RECIPE FOR WOMEN .... தமிழில்

பெண் என்பவள் தாயாக..தாரமாக..ஏவலாளாக ஓடி ஓடி வேலை செய்பவள்.இதை மனதில் கொண்டே நம் முன்னோர்கள் பெண்களின் எதிர்கால ஆரோக்கியத்தை மனதில் கொண்டு பூப்பெய்தவுடன் உளுந்து களி கொடுக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி இருந்தனர்.அதன் செய்முறைகளை தொடர்ந்து பார்ப்போம்.


தேவையான பொருட்கள் ;

பச்சரிசி -ஒரு கப்
முழு கருப்பு உளுந்து - ஒரு கப்
பனை வெல்லம் - கால் கிலோ
நல்லெண்ணெய் - 100 மி.லி
ஏலக்காய் - 2
உப்பு  - ஒரு சிட்டிகை

செய்முறை ;


  • அரிசி ,உளுந்து இரண்டையும் இலேசாக வறுத்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
  • பனைவெல்லத்தை ஒரு கப் தண்ணீர் விட்டு இலேசாக கொதிக்கவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • ஒரு  அடி கனமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள மாவை ஆப்ப மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  • ஏலக்காய்,உப்பு இரண்டையும் சேர்த்துவிடவும்.
  • தண்ணீர் கொஞ்சம் வற்றி மாவு வெந்ததும் பனைவெல்ல கரைசலை சேர்க்கவும்.

  • மிதமான தீயிலேயே கைவிடாமல் கிளறவும்.
  • மாவு கெட்டியாகி இளகிய பதத்தில் வரும்போது நல்லெண்ணெயை சேர்க்கவும்.
  • மாவு நன்கு சுருண்டு அல்வா பதத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வரவேண்டும்.அதுவரை கைவிடாமல்,மிதமான தீயிலேயே கிளறவேண்டும்.
  • நல்லெண்ணெய் பிரிந்து மேலே வரும்.அந்த நிலையில் அடுப்பை அனைத்து பரிமாறவும்.
  • பிள்ளைகள் சாப்பிடுவதாக இருந்தால் முந்திரியை நெய்யில் வறுத்து இதனோடு சேர்த்து கிளறி இறக்கலாம்.
இதை பூப்பெய்திய பெண்கள், கருவுற்ற பெண்கள் ,பிள்ளை பெற்ற பெண்கள் ,மாதவிலக்கு நிற்கும் நிலையில் உள்ள பெண்கள் என  எல்லோருக்கும் கொடுக்கலாம்.இதனால் இடுப்பு வலுப்பெறுவதோடு உடலுக்கு சக்தியையும் கொடுக்கும்.உடலளவில் பலகீனமாகவுள்ள பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய அருமருந்து இது.







Malabar mutton biriyani.. easy steps in தமிழில்

தேவையான பொருட்கள்;

மட்டன் - அரை கிலோ
பாசுமதி அரிசி - அரை கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
புதினா - ஒரு பிடி
கொத்துமல்லி - 2 பிடி
மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
பால்  - 1 கப்
முந்திரி - சிறிதளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
பட்டை,லவங்கம்,சோம்பு,பிரிஞ்சி இலை - சிறிதளவு


செய்முறை ;

  • கறியை சுத்தம் செய்து அதோடு கொஞ்சம் இஞ்சிபூண்டு விழுது ,தயிர்,உப்பு ,மஞ்சள் பொடி  சேர்த்து ஊறவைக்கவும்.
  • பாஸ்மதி அரிசியை தனியே ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,புதினா,கொத்துமல்லி அனைத்தையும் தனித்தனியாக வெட்டி வைக்கவும்.
  • இப்போது ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் ஊற்றி அது காய்ந்ததும் பட்டை,லவங்கம்,சோம்பு,பிரிஞ்சி இலை அனைத்தையும் போட்டு பின் நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • நன்கு வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் இது நன்கு வாசனை வரும்வரை வதக்கவேண்டும்.
  • அடுத்து தக்காளி பச்சைமிளகாய் புதினா போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.எவ்வளவு நன்றாக வதக்குகிறோமோ அந்த அளவுக்கு பிரியாணி சுவையாக இருக்கும்.
  • இப்போது ஊறவைத்துள்ள கறியை போட்டு வதக்கவும்.
  • இந்த நிலையில் மிளகாய்ப்பொடி,கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
  • கறி நன்கு வதங்கியதும் தேவையான உப்பு மற்றும் ஒரு குவளை தண்ணீர் விட்டு குக்கரின் மூடிபோட்டு மூன்று விசில் வரும்வரை வேகவைக்கவும்.
  • அதே நேரம் ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை வறுத்து அதனோடே ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு போட்டு கிளறவும்.
  • ஒரு நிமிடம் இவ்வாறு கிளறிய அரிசியை குக்கரிலுள்ள கறியோடு சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் பால்  சேர்க்கவும்.அரை கிலோ அரிசிக்கு குக்கரில் தண்ணீரின் அளவு மொத்தமாக ஒருலிட்டருக்கு கொஞ்சம் குறைவாக இருக்கவேண்டும்.
  • உப்பை சரிபார்த்து இன்னும் சேர்க்கவேண்டுமானால் சேர்க்கவும்.
  • கொத்துமல்லியை சேர்க்கவும்.
  • நெய் மற்றும் எலுமிச்சையை சேர்க்கவும்.
  • நன்கு கொதிக்கவிடவும்.அவ்வப்போது அரிசி உடைந்துவிடாமல்  கறியோடு கிளறி விடவும்.
  • பாதியளவு தண்ணீர் வற்றியதும் மீண்டும் குக்கரின் மூடியை போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.
  • பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.பின்னர் ஐந்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து இலேசாக கிளறிவிட்டு மூடவும்.இரண்டு நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் ஒவ்வொரு அரிசியும் மலர்ந்தது போல் நிற்கும்.நீங்கள் கிளறி மூடாமல் விட்டால் இதுபோல் வராது.
  • இப்போது சுவையான மலபார் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு தயார்.
டிப்ஸ் ;
  1. எப்போதும் பிரியாணிக்கு கறியின் அளவும்,அரிசியின் எடையும் சமமாக இருக்கவேண்டும்.
  2. ஒரு கப் அரிசிக்கு இரண்டு தக்காளி என்ற அளவில் எடுக்கவேண்டும்.
  3. அரிசி சேர்த்ததும் சிறிது நெய் விடுவது சாதம் ஒட்டாமல் தடுக்கும்.
  4. பால் சேர்க்கும் பிரியாணி வெளிர் நிற வண்ணத்தில் பார்வைக்கும் அழகாய் இருக்கும்.காரத்தையும் மட்டுப்படுத்தும்.
  5. பால் சேர்க்கும்போது சிறிது லெமன் எல்லோ கலரை கரைத்து சேர்த்தால் பிரியாணி கலர் தூக்கலாக தெரியும்.


How to Maintain Sewing Machine.... தமிழில்

தையல் மெஷின் பராமரிப்பு என்பது மெஷினின் ஆயுள்காலத்தை அதிகரிக்க செய்ய நாம் கட்டாயம் செய்யவேண்டிய ஒரு வழிமுறையாகும்.சில எளிய வழிமுறைகள் மூலம் நாம் நமது தையல் இயந்திரத்தின் ஆயுள்காலத்தை இருபது ..இருபத்தைந்து வருடங்களுக்கு மேலும் நீட்டிக்க முடியும்.தொடர்ந்து படியுங்க.. எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கோங்க.


  • தையல் இயந்திரத்தின் எல்லா பாகங்களுக்கும் வாரத்தில் இரண்டுமுறை கட்டாயம் எண்ணெய் விடவேண்டும்.
  • தூசு,துகள்கள் இருந்தால் உடனடியாக துடைத்து சுத்தம்செய்யவேண்டும்
  • ஊசிக்கு கீழேயுள்ள பற்கள்போன்ற பகுதியை கழற்றி அதன் கீழே இருக்கும் நூல்களை அடிக்கடி சுத்தம்செய்யவேண்டும்.இல்லாவிட்டால் தையல் ஒழுங்காக இருக்காது .
  • சில நேரங்களில் தையல் முடிச்சு முடிச்சாக விழும்.அவ்வாறு விழும் முடிச்சானது துணியின் மேல் பகுதியில் விழுந்தால் தையல் இயந்திரத்தின் அடிப்பகுதியில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.அதே சமயம் முடிச்சு துணியின் கீழ்ப்பகுதியில் விழுந்தால் இயந்திரத்தின் மேல் பகுதியில் தான் பிரச்சனை என்று எளிதாக அறிந்துகொள்ளலாம்.
  • துணியின் மேலே பகுதியில் முடிச்சுகள் விழுந்தால் கீழே பாபினில் சரிசெய்யவேண்டும்.நூல் இழுக்கும்போது ஈஸியாக வருகிறதா என்று ஆய்வு செய்யவேண்டும்.
  • ஊசியை சரியாக பொருந்தாமல் இருந்தால் தையல் விழாது.
  • தைக்கும்போது  துணி இழுத்துக்கொண்டு வந்தால்  ஊசியில் பழுது என நினைவில் கொள்ளவும்.ஊசியை மாற்றினால் இந்த பிரச்சனை சரியாகிவிடும்.
  • சிரமம் பார்க்காது ஒருமுறை சிறிய ரக மோட்டாரை உங்கள் தையல் இயந்திரத்தில் பொறுத்திவிட்டால் நேரம் மிச்சமாவதோடு மலைப்பாகவும் இருக்காது.சிறிய இயந்திரத்திற்கான மோட்டார் ஆயிரம் ரூபாய் செலவுக்குள் அடங்கிவிடும்.

  • மோட்டார் உபயோகப்படுத்தும்போது அதற்கான பெடலை பாதத்தின் கீழே வைத்து அழுத்தாமல் இயந்திரத்தின் பக்கவாட்டில் நம் முட்டிக்கு நேராக இயந்திரத்தோடு சேர்த்து கட்டிவிட்டால் நாம் தைக்கும்போது முட்டியை இலேசாக சாய்த்து பெடலை அழுத்தி மோட்டாரை இயக்கலாம்.
  • இவ்வாறு செய்யும்போது பெடலில் மண்,தூசுகள் போன்றவை சென்று அடைவதை தடுப்பதோடு நமக்கு இயக்குவதற்கும் எளிதாக இருக்கும்.
  • இயந்திரத்தின் அருகில் ஒரு காந்தத்தை ஒட்டி வைத்தால் ஊசி,பொத்தான் போன்றவை சிதறி கீழே விழாமல் காந்தத்தில் ஒட்டிவைத்து  பயன்படுத்தலாம்.
  • உபயோகப்படுத்தாத நேரங்களில் இயந்திரத்தை எப்போதும் மூடியே வைக்கவேண்டும்.ஏனெனில் தூசு துகள்கள் இயந்திரத்தில் போட்டுள்ள எண்ணெயில் ஒட்டிக்கொண்டு பிசுபிசுப்பாக மாறி அழுக்காக்கிவிடும்.



Mar 9, 2017

How to maintain silk sarees... தமிழில்

பெண்கள் விரும்பும் அழகான ,ஆடம்பரமான ,விலைமதிப்புள்ள விஷயம் எதுவென்றால்  அது  பட்டுப்புடவைதான்.நம் நாட்டு பெண்களின் பட்டுப்புடவை கட்டும் அழகைப்பார்த்து வெளிநாட்டு பெண்களும் மயங்கி அவர்களும் அதை பின்பற்றி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் அதற்கு காரணம் பட்டுபுடவையின் அழகுதான்.பட்டு இல்லாமல் எந்த விசேஷமும் இல்லை.அந்த அளவுக்கு தங்கத்துக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பட்டுக்கும் நாம் கொடுக்கிறோம்.அத்தகைய சிறப்பு வாய்ந்த பட்டுப்புடவையை பராமரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால் சீக்கிரமே அந்த புடவை பொலிவிழந்துவிடுகிறது.இதனால் மனதளவில் நாம் சோர்ந்துபோகிறோம்.பட்டுப்புடவையை முறையாக பராமரிப்பது எப்படி என்று நாம் தெரிந்து கொண்டால் இந்த சங்கடங்கள் இல்லைதானே.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

  • பட்டுபுடவையின் முதல் சலவையில் சோப்பு உபயோகப்படுத்தக்கூடாது.வெறும் தண்ணீரில் பத்துநிமிடம் ஊறவைத்து அலசிவிடவேண்டும்.
  • பிரஷ் கொண்டு தேய்ப்பதோ,அடித்து துவைப்பதோ கூடாது.

  • அடுத்தடுத்த சலவைகளுக்கு ஷாம்பு பயன்படுத்தி துவைக்கலாம்.சோப்புத்தூளுக்கு பதிலாக ஷாம்பூவை தண்ணீரில் கலக்கி சிலநிமிடங்கள் புடவையை ஊறவைத்து பின்  இலேசாக கைகளால் கசக்கி பின் அலசிவிடவேண்டும்.
  • வாஷிங்மெஷினில் பட்டுபுடவைகளை துவைக்கவே கூடாது.
  • பட்டுப்புடவையை கட்டி அவிழ்த்தபின்  சிறிதுநேரம் காற்றில் உலரவைத்து பின் மடித்து வைக்கவேண்டும்.ஒவ்வொருமுறை கட்டிய பின்னும் அலசவேண்டும் என்பது இல்லை.

  • பட்டுப்புடவையை எப்போதும் நிழலிலேயே உலர்த்த வேண்டும்.எக்காரணம் கொண்டும் வெயிலில் உலர்த்தக்கூடாது.
  • பட்டுப்புவையின் ஜரிகை மேல் நேரிடையாக இஸ்திரி போடக்கூடாது.இது ஜரிகையை பாதிக்கும்.
  • பட்டுப்புடவையை அட்டைப்பெட்டியிலோ,பிளாஸ்டிக் கவரிலோ போட்டு வைக்கக்கூடாது.நன்கு இஸ்திரி போட்டு மடித்து வைத்த புடவையை ஒரு வெண்மைநிற பருத்திப்பையில் போட்டுவைத்தால் புடவையின் ஆயுள் கூடும்.நாம் வெளியூர் செல்லும்போது அப்படியே எடுத்துச்செல்லலாம்.

  • பட்டுப்புடவையை உபயோகப்படுத்தாமல் அப்படியே வைக்கவும் கூடாது.மடிப்புகள் விட்டுப்போய் புடவை பாழ்பட்டுவிடும்.எனவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை புடவையை பிரித்து மடிப்பை மாற்றி மடித்துவைக்கவேண்டும்.
  • விலை உயர்ந்த பட்டுபுடவைக்கு  உலர் சலவையே சிறந்தது.
  • பட்டுப்புடவையை அலசும்போது பூந்திக்கொட்டையை ஊறவைத்த நீரில் அலசினால் புடவையின் பளபளப்பு மங்காமல் இருக்கும்.

Mar 8, 2017

MAKE YOUR NATURAL HAIR DYE AT HOME... தமிழில்

ஹேர் டை எனப்படும் கூந்தல் சாயம் இன்று எல்லோரையும் இளமையாக வைத்திருக்க உதவும் ஒரு முக்கிய பொறுப்பை வகித்துவருகிறது.நாற்பது வயதை தாண்டிய ஒவ்வொருவரும் தம்முடைய மாதாந்திர பட்ஜெட்டில் கூந்தல் சாயத்துக்கும் ஒரு நிரந்தர இடத்தை ஏற்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஆனால் கடைகளில் விற்கும் கூந்தல் சாயங்கள் நம் உடலுக்கு நல்லதா என்று கேட்டால் தயங்காமல் சொல்லலாம் இல்லை என்று.கூந்தல் சாயங்களில் பயன்படுத்தப்படும் அம்மோனியா என்ற ரசாயனப்பொருள் ஒவ்வாமையையும் ,நாளடைவில் புற்று நோயையையும் வரவழைக்கக்கூடியவை.சரி..அம்மோனியா இல்லாத ஹேர் டை உபயோகிக்கலாமா என்று கேட்டால் அதுவும் கூடாது என்று தைரியமாக சொல்லலாம்.ஏனெனில் அம்மோனியா மட்டும் கெடுதல் கிடையாது.சோடியம் கார்பனேட் ,ஹைட்ரஜன் பெராக்சைடு ,மெத்தைல் பினால் போன்ற பிற பொருள்களும் ஹேர் டையில் கலந்திருக்கின்றன.இவைகளும் இரத்த புற்றுநோய்,நுரையீரல் வீக்கம்,தோல் எரிச்சல் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இதற்கு என்னதான் தீர்வு என்றால் ,அனைவரும் இயற்கைக்கு திரும்பவேண்டும்.இதுவே தீர்வு.இயற்கையில் தரமான வண்ணத்தை தலைமுடிக்கு கொண்டுவரமுடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.கீழே தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி உங்கள் முடியின் நிறத்தை கருமையாக்க முடியும்.இவை அனைத்துமே நாட்டு மருந்துக்கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை.


நிலாவரை பொடி -100 கிராம் 
மருதாணி பொடி - 100 கிராம் 
அவுரிப்பொடி  - 100 கிராம் 
தான்றிக்காய் பொடி -100 கிராம் 
கடுக்காய் பொடி - 100 கிராம் 
நெல்லிக்காய் பொடி  - 100 கிராம் 
வெந்தயபொடி - 100 கிராம் 

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வையுங்கள்.தேவைப்படும்போது இவற்றில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி எடுத்து பீட்ரூட் சாறு கலந்து தலைக்கு தடவி ஒருமணிநேரம் கழித்து தலையை அலசவும்.இதை முதல்நாள் இரவே தயாரித்து வைத்து உபயோகித்தால் இன்னும் பயன்தரும். பீட்ரூட் சாறுக்கு பதிலாக காபி அல்லது தேயிலை நீரை பயன்படுத்தலாம்.


Mar 7, 2017

How to remove negative energy...?

நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி எனப்படும் நேர்மறை  சக்தியும் நெகடிவ் எனர்ஜி எனப்படும் எதிர்மறை  சக்தியும் உலவுவதாக பலராலும் நம்பப்படுகிறது.நமக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதோ ஒரு விஷயத்தை பார்த்து நாம் பயப்படத்தான் செய்கிறோம்.உடனே கோயில்,குளம் என்று நல்ல சக்தியை தேடி செல்கிறோம்.நம் வீட்டிலும் சூழ்நிலைகள் மோசமடையும்போது நாம் முதலில் பயப்படுவது எதிர்மறை சக்தி எனப்படும் நெகடிவ் எனர்ஜிக்குத்தான்.சரி..இதிலிருந்து விடுபட என்ன செய்வது..? தெய்வ வழிபாடு ஒன்று தான் நமக்கு நேர்மறை எண்ணங்களை கொடுத்து நம்மை தைரியப்படுத்தும்.அது தவிர வீட்டில் சாம்பிராணி போடும்போது வழக்கமாக அல்லாமல் சில பொருட்களை  சாம்பிராணியுடன் சேர்த்து போடுவதால் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகள் அகன்றுவிடுவதாக நம்பப்படுகிறது.அது என்ன பொருள்..? எங்கே கிடைக்கும்..? இதுதானே உங்கள் கேள்வி..? வாங்க விளக்கமாக பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்;
வெண்கடுகு - 250 கிராம்
நாய் கடுகு - 250 கிராம்
 மருதாணி விதை - 250 கிராம்
அருகம்புல் பொடி - 50 கிராம்
வில்வஇலை பொடி  - 50 கிராம்
வேப்பஇலை பொடி - 50 கிராம்
சாம்பிராணி பொடி - 250 கிராம்
 மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து சாம்பிராணி போடுங்கள்.குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது இதை நீங்கள் செய்யும்போது உங்கள் வீட்டிலுள்ள எதிர்மறை விஷயங்கள் அனைத்தும்
மறைந்து ஒரு நிம்மதியான உணர்வை பெறுவீர்கள் என்பது நிச்சயம்.இந்த பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்துக்கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியதுதான்.வாங்கி பயன்பெறுங்கள்.

Mar 6, 2017

USES OF FENUGREEK ... IN TAMIL

 நம் சமயலறையில் நமக்கே தெரியாமல் பல பொக்கிஷங்களை பொதித்து வைத்திருக்கிறோம்.அவைகளில் முக்கியமான ஒன்று வெந்தயம்.இதை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொன்னால்  கூட தவறில்லை எனலாம்.அந்த அளவுக்கு அதிகப்படியான பலன்களை தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இதில் நீர்சத்து, புரதசத்து,
கொழுப்புசத்து , மாவுசத்து, சுண்ணாம்புசத்து, இரும்புசத்து, வைட்டமின்A மற்றும் நார்சத்து அடங்கி இருக்கிறதாம்.  இதை நீங்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் இன்றைய இளைய தலைமுறைகளுக்கும் விளக்கி சொல்லுங்கள்.ஆரோக்கியத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுத்தருவதில் தவறில்லைதானே..!



  • உடல் சூட்டை தணிக்க வெந்தயத்தை ஊறவைத்து அதை அந்த தண்ணீரோடு சேர்த்து சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும்.
  • மலச்சிக்கலா ..? கவலைப்படாதீங்க.தினமும் இரவு படுக்கைக்கு முன் வெந்தயத்தை தண்ணீரோடு எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனை போயே போச்சு.
  • உங்களுக்கு சர்க்கரை நோயா..? வெந்தயத்தை வறுத்து போடி செய்து தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீரோடு சாப்பிட்டு வாருங்கள்.சர்க்கரை நோய் துண்டை காணும்,துணியை காணும் என்று ஓடிவிடும்.
  • இரும்புசத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதா..? தினமும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போதும்.48 நாட்களில் உங்கள் இரத்த பரிசோதனை அறிக்கை சொல்லும் உங்களுக்கு குறைபாடு நீங்கிவிட்டது என்று.
  • தீப்புண் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா..? சிறிது வெந்தயத்தை ஊறவைத்து ,அரைத்து தீப்புண்ணின் மேல் மெதுவாக தடவுங்கள்.அந்த இடம் குளிர்ச்சியடைந்து விரைவில் புண்கள் ஆறும்.
  • முடி கொட்டுகிறதே என்று கவலைப்படுகிறீர்களா..? சிறிது வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தடவி ஊறவைத்து அரைமணிநேரம் கழித்து குளியுங்கள்.முடி கொட்டுவதும் நிற்கும்.கூந்தலும் செழித்து வளரும்.
  • தலையில் பொடுகு,வறண்ட பொலிவிழந்த முடி ஏற்பட்டுள்ளதா..? அதற்கும் இந்த வெந்தய பசைதான் தீர்வளிக்கும்.இதை  தொடர்ந்து தலையில் தடவும்போது பொடுகு நீங்கி,முடி பளபளப்பாக மாறும்.
  • குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லையா..? வெந்தயம்,பூண்டு சேர்த்து அரிசி கஞ்சி செய்து கொடுங்கள்.குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கிடைக்கும்.
  • மாதவிடாய் கோளாறை சரிசெய்ய ஏகப்பட்ட மருந்து சாப்பிடுகிறீர்களா..? தினமும் மறக்காமல் வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்களேன்.உங்கள் பிரச்னை ஓடிப்போகிறதா இல்லையா என்று பாப்போம்.
  • உடல் பருமன் அதிகமா இருக்க..? உடல் பயிற்சி செய்ய சோம்பலா இருக்க..? அப்போ உங்களுக்கு வெந்தயம் ஒன்றுதான் தீர்வு.தினமும் சாப்பிடுங்க.எடையை குறைங்க.
  • கூந்தல் தைலம் தயாரிக்கிறீர்களா..? அதில் வெந்தயத்தை சேர்க்க மறந்துடாதீங்க.உங்கள் உடல் குளிர்ச்சியாக இருந்தால்தானே கூந்தல் உதிர்வது நிற்கும்.
  • ஆண்களுக்கும் வெந்தயத்தை அடிக்கடி கொடுத்திட்டு வாங்க.அப்போது தான் உடல் வெப்பம் குறைந்து ஆண்மை பெருகும்.
  • மூலநோய் வந்து யாராவது முனகிகிட்டே இருக்காங்களா..? வெந்தயத்தை கொடுங்க.மூலமாவது.. ஒண்ணாவது..
  • எல்லாவித குடல் நோய்களுக்கும் வெந்தயம் ஒரு அருமருந்தாம்.அப்போ இனிமே வெந்தயத்தை கிலோ..கிலோவா வாங்கி கொட்டுங்க.என்ன நான் சொல்றது...! 

Mar 5, 2017

TETHERING : how to use your mobile internet on laptop

இன்று எல்லோர் கையிலும் ஆண்ட்ராய்டு மொபைல்களும் ,லேப்டாப் எனப்படும் மடிக்கணினியும் அதிக பயன்பாட்டுக்கு வந்து அவர்களுடைய பெரும்பாலான நேரங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.ஆனாலும் புதிதாக மடிக்கணினி வாங்கும் ஒருவர் அதைப்பற்றிய அடிப்படை அறிவை அறிந்து வைத்திருந்தால் சில ஆயிரங்களை மிச்சப்படுத்தலாம்.புதிதாக மடிக்கணினி வாங்கும் நபர் அதில் இணைய இணைப்பு பெறுவதற்கு அதற்கான முகவர்களை அணுகும்போது அவர்களுடைய அறியாமையை பயன்படுத்தி டேட்டா கார்ட் [data card ]எனப்படும் டாங்கிள்ஸ் -ஐ சில ஆயிரங்களுக்கு அவர்கள் தலையில் கட்டிவிடுவர் .இது நமக்கு தேவையில்லாத செலவுதான்.ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் நம் எல்லோர் கையிலும் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கும்போது அதை கொண்டே நாம் நம் மடிக்கணினியில் இணைய இணைப்பை கொண்டுவர முடியும்.USB கேபிளை கொண்டு நம் மொபைலை மடிக்கணினியுடன் இணைப்பதின் மூலமாகவும்,WIFI மூலமாகவும் இரண்டு வழிகளில் வழிகளில் இதை நாம் செய்யமுடியும்.இதில் WIFI மூலமாக இணைப்பதற்கு உங்கள் மடிக்கணினியில் WIFI வசதி இருக்கவேண்டும்.

  • முதலில் உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று MORE-ஐ கிளிக் பண்ணுங்கள்.



  • பின்னர் தோன்றும் விண்டோவில் உள்ள TETHERING & PORTABLE HOTSPOT-ஐ கிளிக் பண்ணுங்கள்.


  • அடுத்து வரும் விண்டோவில் வரும் USB TETHERING -ஐ கிளிக் பண்ணிவிட்டு உங்கள் மொபைலை மடிக்கணினியுடன் இணைத்துவிட்டால் போதும்.உங்கள் மடிக்கணினி இணைய உலகத்தை சுற்ற தயாராகிவிடும் .
  • அவ்வாறல்லாமல் WIFI  மூலமாக  நீங்கள் இணைக்க விரும்பினால் PORTABLE WLAN HOTSPOT என்பதை கிளிக் பண்ணிவிட்டு அதற்கு கீழே உள்ள SET UP WLAN  HOTSPOT-ல்  உங்களுக்கென ஒரு கடவுச்சொல் [PASSWORD]  உருவாக்கவேண்டும்.

  • அடுத்து உங்கள் மடிக்கணினியில் WIFI -ஐ ON பண்ணிவிட்டு உங்கள் மொபைலில் கொடுத்த அதே கடவுச்சொல்லை மடிக்கணினிக்கும் கொடுத்தால் USB கேபிள் இணைக்காமலேயே இணையத்தை பயன்படுத்தலாம்.


Mar 4, 2017

MUGHLAI KADAL PAASI செய்வது எப்படி..?

கடல் பாசி என்பது சைனா க்ராஸ் என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் ஒரு உணவுப்பொருள்.இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.உடல் சூட்டை தனிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.உண்பதற்கு ஜெல்லி போன்ற உணர்வை தரும் இது குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு வகை.இதன் செய்முறைகளை தெரிந்துகொள்வதற்கு முன் தேவையான பொருட்களை பார்ப்போம்.

சைனா கிராஸ் -1 பாக்கெட்
சர்க்கரை -அரை கிலோ மற்றும்
 ஆரஞ்சு,சிவப்பு,மஞ்சள்  வண்ணங்கள்  சிறிதளவு



செய்முறை;
முதலில் கடல்பாசியை ஒரு லிட்டர் நீருடன் அது நன்கு கரையும்வரை கொதிக்க வைக்கவும்.அது நன்கு கரைந்த பின்னர் சர்க்கரை கலந்து இன்னும் கொதிக்கவிடவும் .பின்னர்  அணைத்துவிட்டு மூன்று தனித்தனி பாத்திரங்களில் சமமாக பிரிக்கவும்.ஒவ்வொரு பாத்திரத்திலும் ஒவ்வொரு கலரை சேர்த்து நன்கு கலக்கவும்..வேண்டுமானால் வாசனைக்கு நீங்கள் விரும்பும் எஸென்ஸ் சேர்க்கலாம்.இப்போது மூன்று அகலமான தட்டில் இவற்றை தனித்தனியாக ஊற்றி ஆறவிடவும்.பிரிட்ஜிலும் வைக்கலாம்.நன்கு கெட்டியானதும் எடுத்து நீங்கள் விரும்பும் வடிவத்தில் துண்டுகளாக போட்டு பரிமாறவும்.தண்ணீருக்கு பதிலாக பாலும் உபயோகப்படுத்தலாம்.





MINT STREET PANI PURI RECIPE... IN TAMIL

தேவையான பொருட்கள் ;                                      

புதினா -ஒரு பிடி                                                      
கொத்துமல்லி -ஒரு பிடி                                                                  
கறிவேப்பிலை -இரண்டு கொத்து                                
பச்சை மிளகாய்-1
சீரகம்-அரை தேக்கரண்டி
பூண்டு-இரண்டுபல்
வெல்லம் -சிறிதளவு
உப்பு-சிறிதளவு
மிளகாய் தூள்-அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் -2 சிட்டிகை
உருளைக்கிழங்கு -2
பெரியவெங்காயம்-2

பூரிக்கு ;
மைதா -1 கப்
ரவா -கால் கப்
உப்பு -சிறிதளவு




செய்முறை ;
  • முதலில் மைதா,ரவா,உப்பு மூன்றையும் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.பின்னர் அதை பெரிய சப்பாத்திகளாக தேய்த்து சிறிய வட்டவடிவ பாத்திரத்தின் உதவியால் சிறு சிறு வட்டங்களாக வெட்டி பூரிகளாக பொரித்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து  உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து பின் அதை நன்கு மசித்து அதோடு மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து ஒரு கடாயில் நன்கு கிளறி எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • பானிக்கு மிக்ஸியில்புதினா,கொத்துமல்லி,கறிவேப்பிலை,சீரகம்,பூண்டுப்பல், வெல்லம்  ,பச்சைமிளகாய்,உப்பு போன்றவற்றை போட்டு நன்கு அடித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.இது நன்கு நீர்த்து இருக்கவேண்டும்.
  • பெரியவெங்காயத்தை சிறிதாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
  • இறுதியாக பொரித்து வைத்துள்ள பூரிகளை எடுத்து மேல்பக்கம் இலேசாக உடைத்து அதில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பவும்.பின் அடித்து வைத்துள்ள பானியை நிரப்பி பரிமாறவும்.இது உண்பதற்கு கடையில் வாங்கும்  பானி பூரியைவிட சுவையாக இருக்கும்.விரும்பினால் பச்சை பட்டாணி அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை வேகவைத்து உருளைக்கிழங்கு  மசாலாவோடு சேர்த்துக்கொள்ளலாம்.




Mar 2, 2017

பிறக்கப்போவது ஆணா ?..பெண்ணா ? ஒரு சிம்பிள் டெஸ்ட் .

 தாய்மை என்பது இறைவன் கொடுக்கும் ஈடு இணையில்லா வரம்.ஆணோ..பெண்ணோ..குழந்தை என்று ஒன்று வந்துவிட்டால் அந்த குடும்பத்தின் குதூகலத்துக்கு பஞ்சமிருக்காது.




அதே சமயத்தில் பெண் குழந்தை உள்ளவர்கள் ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவதும் ,ஆண் குழந்தை உள்ளவர்கள் பெண் குழந்தைக்கு ஆசைப்படுவதும் மனித இயல்பு.நம் நாட்டு சட்டப்படி கருவிலிருப்பது ஆணா..பெண்ணை என்று அறிய முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.இருப்பினும் அடுத்த குழந்தை இதுவாகத்தான் வேண்டும் என்று பிரார்த்திக்கும் தம்பதிகளுக்கு வழிகாட்டும் விதமாக சீன மக்கள் ஒரு அட்டவணையை உருவாக்கி அதன்படி கருத்தரிக்கின்றனர்.இந்த அட்டவணைப்படி ,கருத்தரிக்கும் பெண்ணின் வயதும் கருத்தரிப்பதற்கு  முன் உள்ள கடைசி மாதவிலக்கு தேதியும் தான் முக்கிய தகவலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.


உதாரணமாக பெண்ணின் வயது 20 என்று வைத்துக்கொள்வோம்.அந்த பெண்ணின் கடைசி மாதவிலக்கு நாள் ஏப்ரல் என்று எடுத்துக்கொள்வோம்.இப்போது அந்த அட்டவணையை பார்க்கும்போது இருபது என்ற எண்ணும் ஏப்ரல் என்ற  மாதமும் இணையும் கட்டத்தில் உள்ள எழுத்து B .எனவே அந்த பெண்ணுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆண் என்பதை அறியலாம்.இதே போல பதினெட்டு முதல் நாற்பத்தைந்து வயது வரை உள்ள பெண்களுக்காக இந்த அட்டவணையை அந்நாட்டு மக்கள் தயாரித்து வைத்துள்ளனர். வீட்டிலும் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் பரிசோதித்து பாருங்கள்.முடிவு சரியா ..தவறா என்று தெரியாமலா போய்விடப்போகிறது.


என்ன விலை அழகே...! SIMPLE & NATURAL BEAUTY TIPS.

இன்றைய அழகு சாதனப்பொருட்களில்  சந்தையில் அதிகஅளவு ஆக்கிரமித்திருப்பது பெண்களுக்கான மெருகூட்டும் பொருட்கள் தான்.ஆனால் எவ்வளவுதான் இதுமாதிரியான பொருட்கள் சந்தைக்கு வந்தாலும் இயற்கையான பொருட்களுக்கு ஈடாகுமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.உதாரணமாக ஒருவர் முகப்பூச்சு கிரீம் -ஐ காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்  என்று வைத்துக்கொள்வோம்.இன்னொருவர் கடலை மாவையும்,தக்காளி,தயிர் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகிறார்.சிலகாலம் கழித்து இருவர் முகங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் முகப்பூச்சு கிரீம் பயன்படுத்தியவரின் முகம் சாம்பல் பூத்தது போல தன் சுயரூபத்தை இழந்து காணப்படும்.ஆனால் இயற்கை பொருட்களை மட்டுமே உபயோகித்தவரின் முகமோ எழில் கூடி பிரகாசமாக இருக்கும்.எனவேதான் இயற்கைக்கு ஈடு எதுவுமில்லை என்று முன்னோர்கள் எச்சரித்தனர்.தலை முதல் கால்வரை காசுகொடுத்து அழகுபடுத்தும் கலாச்சாரம் பெருகிவிட்ட இக்காலத்தில் எளிய முறையில் இயற்கையின் பரிசான சில பொருட்களை கொண்டு நம்மை அழகுபடுத்திக்கொள்வது எப்படி என்று அடுத்து வரும் வரிகளில் அறிந்துகொள்ளலாம்.

  • வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை கட்டாயமாக்குங்கள்.இது உங்கள் உடல் சூட்டை தணித்து முடி கொட்டுவதை கட்டுப்படுத்தும்.
  • வெந்தயம்,செம்பருத்தி இலை ,கரிசலாங்கண்ணி இவற்றில் ஏதாவது ஒன்றோடு ஒரு பிடி மருதாணி இலையை அரைத்து தலைக்கு தடவி ஒருமணிநேரம் கழித்து குளியுங்கள்.இது உங்கள் கூந்தலை மென்மையாக்குவதோடு கருமையாகவும் மாற்றும் மேஜிக் .
  • முகத்துக்கு தினசரி பூச்சாக கடலைமாவு,தக்காளி,பப்பாளி கூழ்,தயிர்,முல்தானி மெட்டி ,எலுமிச்சை,ஆப்பிள் சீடர் வினிகர் இவற்றில் ஏதாவது ஒன்றை வழக்கப்படுத்துங்கள்.இது உங்கள் முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவதோடு முகத்தை பிரகாசமாகவும்  மாற்றும்.

  • கற்றாழை,தேன் ,ரோஜா இதழ் இவற்றையும் உங்கள் முகத்துக்கு மாற்றி மாற்றி உபயோகப்படுத்துங்கள்.இது செழிப்பான ,பளபளப்பான தோற்றத்தை மேம்படுத்தி கொடுக்கும்.
  • படுக்கப்போகும்  முன் கை ,கால்களுக்கு தேங்காய் எண்ணெய் தடவுங்கள்.இது உங்கள் தோல்பகுதி சுருக்கமில்லாமல் செழிப்பாக அழகாக தோன்றச்செய்யும்.
  • குளிக்கும்போது குதிகால்களை சொரசொரப்பான கல்லில் இலேசாக தேய்த்து குளியுங்கள்.இது குதிகால்களில் வெடிப்புகள் இல்லாமல் உங்களை பாதுகாக்கும்.
  • பேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும் பிளக்கர் -ஐ (plucker ) வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்.அவ்வப்போது உங்கள் புருவத்தின் முடிகளை அழகிய வளைவாக சீர்படுத்துங்கள்.இது உங்கள் முகத்துக்கு ஒரு அழகான தோற்றத்தைக்கொடுக்கும்.நீங்கள் உங்கள் புருவத்தை சீர்படுத்தும்போது புருவத்தின் கீழ்ப்பகுதியை மட்டும்நீக்குங்கள்.அப்போதுதான் உங்கள் புருவம் அழகிய வளைவாக வரும்.புருவத்தின் மேல் பகுதியை நீக்கினால் உங்கள் புருவம் வளைவாக இல்லாமல் நேராக இருக்கும்.இது பார்க்க அழகாக இருக்காது.
  • கால் விரல் நகங்களை வெட்டி நக சாயம் பூசுங்கள்.இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

  • உணவில் காய்கறி,பழங்கள்.தானியங்கள் போன்றவற்றை அதிகப்படுத்தி மாவுப்பொருட்களை குறையுங்கள்.இதனால் உங்கள் எடை கட்டுப்படுவதோடு உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும்.
  • உங்கள் உடல் வாகுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து உடுத்துங்கள்.இது உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்க்கும்போது ஒரு தன்னம்பிக்கையை கொண்டுவரும்.