இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jun 20, 2017

POTATO FISH FRY.......தமிழில்

உருளைக்கிழங்கு வறுவல் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.அதில் என்ன ஸ்பெஷல் என்று தானே கேட்கிறீர்கள்.உண்மையிலேயே இது ஸ்பெஷல் தான்.வாங்க.நீங்களும் தெரிஞ்சுக்கலாம்.



தேவையான பொருட்கள்;

பெரிய உருளைக்கிழங்கு-2

மிளகாய்ப்பொடி-2 தேக்கரண்டி

மஞ்சள்பொடி-இரண்டு சிட்டிகை

இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி

கரம் மசாலா -அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை;

  • முதலில் உருளைக்கிழங்கை நன்கு  கழுவிவிட்டு நீள்வட்ட வடிவில் தடிமனாக வெட்டவும்.
  • பின்னர் ஒரு சிறிய பாட்டிலின் மூடியை எடுத்து வெட்டிவைத்துள்ள உருளைக்கிழங்கின் ஓரத்தில் வட்டவடிவமாக அழுத்தி வெட்டவும்.அப்போதுதான் அது மீன் துண்டுகளை போல வடிவத்தில் வரும்.
  • இப்போது அந்த உருளைக்கிழங்கு துண்டுகளை எண்ணெய்யில் விட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் மிளகாய்ப்பொடி,மஞ்சள்பொடி,உப்பு,இஞ்சிபூண்டு விழுது,கரம் மசாலா அனைத்தையும் போட்டு சிறிது நீர் விட்டு பிசையவும்.பின்னர் இந்த கலவையை பொறித்துவைத்துள்ள உருளைக்கிழங்கின் மேல் தடவவும்.

  • இப்போது மசாலா தடவிய உருளைக்கிழங்கை எண்ணெய் தடவிய தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சிவக்கும்வரை திருப்பிப்போட்டு பொரித்து எடுத்தால் உருளைக்கிழங்கு மீன் வறுவல் தயார்.
  • இது பார்ப்பதற்கு அசல் மீன் போலவே இருக்கும் .தின்று பார்த்தால் மட்டுமே உருளைக்கிழங்கு என்று தெரியவரும்.உருளைக்கிழங்கு தோல் நீக்கக்கூடாது.அப்போதுதான் மீனின் தோல் மற்றும் சதைப்பகுதி போன்ற  தோற்றம் வரும்.



Jun 14, 2017

வடைக்கு போட்டியான நாகூர் வாடா .. செய்யலாம் வாங்க

மாலை நேரங்களில் நாகூர் தர்காவின் சுற்றியுள்ள தெருக்களில் இந்த வாடா மிகவும் பிரசித்தம்.முக்கியமாக இது கடைகளில் கிடைப்பது இல்லை.இங்குள்ள இஸ்லாமியர்கள் மிக பக்குவமாக இதை தெருவோரங்களிலேயே தயாரித்து விற்கிறார்கள்.இதற்கு தொட்டுக்கொள்ள உள்ளடம் என்று ஒன்று செய்வார்கள்.அதன் சுவைக்கு ஈடே இல்லை.வாங்க.... நாமும் செய்து பார்க்கலாம்.


வாடா செய்ய தேவையான பொருட்கள்;

பச்சரிசி - 2 கப்
ரவை-அரை கப்
உப்பு -தேவையான அளவு
சமையல் சோடா -ஒரு சிட்டிகை
இறால் -ஒரு கப்
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை ;

அரிசியை நன்கு ஊறவைத்து நிறைய தண்ணீர்விட்டு  அரைத்துக்கொள்ளவும்.பின்னர் இதை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சவும்.தண்ணீர் ஓரளவு வற்றி வரும் வேளையில் அடுப்பை அணைத்துவிட்டு இந்த மாவோடு ரவை,உப்பு ,சமையல் சோடா சேர்த்து வடைமாவு பதத்திற்கு நன்கு பிசைந்து ஒரு இரவு முழுதும் அப்படியே விடவும்.
மறுநாள் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு கழுவிய இறாலை சிறிது உப்பு மட்டும் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.இதில்  முக்கிய விஷயம் இறால் தோல் நீக்கக்கூடாது.நன்கு வதக்கவும் கூடாது.பின்னர் மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கலந்து வைத்துள்ள மாவை உளுந்து வடைக்கு தட்டுவதுபோல தட்டி அதில் இரண்டு இறால்களை மேலே தெரியுமாறு பொதிக்கவும் .அதை எண்ணெயில் இட்டு வடை போல பொரித்து எடுக்கவும்.இப்போது சுவையான நாகூர் வாடா தயார்.

இந்த வாடாவுக்கு தொட்டுக்கொள்ள உள்ளடம் செய்வது எப்படி என்று சொல்லவில்லையே என நிறைய பேர் கேட்பது காதில் விழுகிறது.ஒரு நிமிஷம் இருங்க .அதையும் சொல்லிவிடுகிறேன்.அது ரொம்ப சிம்பிள்.பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம்,இரண்டு பச்சைமிளகாய்,ஒரு சிட்டிகை மஞ்சள்பொடி,சிறிதளவு உப்பு இதை எண்ணெய் விட்டு வதக்கினால் உள்ளடம் தயார்.

Jun 7, 2017

உயிரற்று போன நீதிகள்

இது என்னுடைய நூறாவது பதிவு.இது சமூக நோக்கோடு இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதால் என் அருகில் நடந்த  சம்பவத்தையே கனத்த மனதோடு எழுதுகிறேன்.இதனால் நீதி உயிர்பெறுமானால் எனக்கு மகிழ்ச்சி.



இது  ஒரு உண்மைக்கதை என்றால்  நம்பவா போகிறீர்கள்.இதில் வரும் சரவணனை போல பலபேர் சட்டத்தின்  கையில் சிக்காமல் வெளியே உல்லாசமான வாழ்க்கையை ரசித்து..ருசித்து  ..அனுபவித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.சட்டமும் வாய்தா என்ற திகட்டாத அல்வாவை அவனுக்கு தொடர்ந்து கொடுத்து அவனுடைய செயல்களுக்கு மறைமுகமாக உதவிவருவதுதான் மிகப்பெரிய கொடுமை.இந்த பதிவு பல சட்ட வல்லுனர்களின் பார்வைக்கும் போகும் என்ற உணர்வில் என்   பதிவை தொடர்கிறேன்.


மீனாட்சி  ஒரு தொழில்நுட்ப பட்டதாரி.பல இடங்களில் வரன் வந்ததில் சரவணனை  பிடித்துப்போக பெரியோர்கள் பேசி  திருமண தேதி குறித்தனர்.வரதட்சணை லிஸ்டில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம்..வீடு  கூட்டும் விளக்குமாறு வரை கொடுத்து திருமணம் நடந்தது.அடுத்த வருடமே ஒரு பிள்ளை.சில வருடங்கள் சந்தோஷமான வாழ்க்கைதான். அந்த  சிலவருடங்களில் அவளுடைய நகைகள் அனைத்தும் அவனால் பறிக்கப்பட்டன. குழந்தையை காரணம் காட்டி அவள் வேலைக்கு செல்லும் உரிமை மறுக்கப்பட்டது.சரி..நம் மேல் உள்ள பாசத்தில் சொல்கிறார்கள் என்று  மீனாட்சிக்கு சந்தோஷம்தான்.அவனுக்கு பெரும்பாலும் லேப்டாப்பிலேயே வேலை .சில மாதங்களில் அவனுக்கு பெருநகரம் ஒன்றில் வேலை கிடைக்க மனைவி மற்றும்  குழந்தையை விட்டுவிட்டு தான் மட்டும் அந்த நகரத்தில் குடியேறினான்.அவனுடைய நடவடிக்கையில்  மீனாட்சிக்கு சந்தேகம்வரை அவனுடைய லேப்டாப் -ஐ  ஆராய பல பூதங்கள் கிளம்பியிருக்கிறது.அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் ,அந்த பெண்களோடு அவன் உல்லாசமாக இருப்பதும் வெளிச்சத்துக்கு வர பிரச்சனை அவன் வீட்டு பெரியோர்கள் முன் பஞ்சாயத்துக்கு வந்தது.அவனுடைய குடும்பம் ஊரில் மிகவும் மரியாதையான குடும்பம்தான்.ஆனால் மீனாட்சி விஷயத்தில் அவர்கள் ஒருதலைப்பட்சமாக அவனுக்கு இன்னும் ஊக்கம் கொடுத்து பேச அவள் நீதிமன்ற உதவியை நாடவேண்டியதாகிவிட்டது.கொடுத்த வரதட்சணைக்கு  ஆதாரம் இல்லை. அவனிடம் அவள்  இழந்த பணமதிப்பு அவளை பொறுத்தவரை அதிகம் தான்.ஆனாலும் அவன் செய்த அத்தனை அசிங்கங்களுக்கும் ஆதாரங்களை கொடுத்தும் நீதிமன்றம் வாய்தா என்ற பெயரில் அவனுக்கு பல வருடங்களாக சலுகை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.வழக்கு ஆரம்பித்த நிலையிலிருந்து ஒரு அங்குலம்  கூட இத்தனை வருடங்களாக நகரவில்லை.அவனும் சட்டத்தின் கையில் சிக்காமல் இன்னும் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான்.நம் நாட்டை பொறுத்தவரை நீதி என்பது செத்த பிணம்.என்னை சுற்றியுள்ள எத்தனையோ மீனாட்சிகளுக்காக இந்த பதிவை பதிவிடுகிறேன்.பெண்களுக்காக குரல் கொடுக்கும் எத்தனையோ இயக்கங்கள் இதை படிக்கநேர்ந்தால் மீனாட்சிக்காக இல்லாவிட்டாலும் சரவணனைப்போன்ற காம மிருகங்கள் இன்னும் பலரின் வாழ்க்கையை அழிக்காமல் இருக்க முடிந்ததை செய்யுங்கள்.அவனைப்பற்றிய அத்தனை ஆதாரங்களையும் உலகுக்கு வெளிப்படுத்த உதவுங்கள்.மேலும் விபரங்கள் தேவைப்படின் எனது மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.